கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு

கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்- 2 மாணவி  தற்கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மாணவி முன்பு படித்த ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, மாணவி அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


இந்த நிலையில் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா?, தற்கொலைக்கு முன்பு யார், யாரிடம் அவர் செல்போனில் பேசினார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தற்கொலை செய்த மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்தும், பழைய பள்ளியில் மாற்று சான்றிதழ் கேட்டு மாணவி எழுதி கொடுத்த விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தையும் போலீசார் ஒப்பீட்டு பார்த்தனர். இதில் மாணவியின் கையெழுத்து சரியாக பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாணவி தனது நோட்டுகளில் எழுதிய கையெழுத்துடன் ஒப்பீடு செய்ய உள்ளனர்.


இதையடுத்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று அந்த பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தி மாணவியின் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் எடுத்து சென்றனர். மேலும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கைதான ஆசிரியர் வீடு, மாணவியின் ஆண் நண்பர் வீடு, பள்ளியில் உள்ள முதல்வரின் அறை ஆகிய இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில், பள்ளி முதல்வரின் அறையில் இருந்து மாணவியின் வருகை பதிவேடு, மதிப்பெண் அடங்கிய ஆவணங்கள், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வீடு மற்றும் மாணவியின் ஆண் நண்பர் வீட்டில் இருந்து தலா ஒரு செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.


மாணவி தற்கொலை குறித்த செய்தியை  பல்வேறு யூடியூப் சேனல்கள் பதிவு செய்துள்ளன. அப்போது மாணவியின் பெயர், அவரது குடும்பத்தினர் அவர் வசித்த வீடு உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட்டன. போக்சோ சட்டத்தின் கீழ் 18 வயதிற்கு குறைவான சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகும் போது அவர்கள் குறித்த அடையாளங்களை வெளியிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.

கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார்  48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert