உயிரைப் பறித்த வீடியோ கேம்!

திண்டுக்கலில் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிகொடுத்த மொபைலில் படிக்காமல் வீடியோ கேம்ஸ் விளையாடிய மகனை ஆத்திரத்தில் தாய் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது செங்குறிச்சி ஆகும். இந்த கிராமத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கண்ணு (58) விவசாயி. இவர் இறந்து சில ஆண்டு காலங்கள் ஆகிறது. இவரது மனைவி அழகம்மாள் (48) இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. அழகம்மாள் கூலி வேலை செய்து வரும் நிலையில் ஒரு மகன் மற்றும் ஒரு மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு புளியம்பட்டியில் மூன்றாவது மகனான செல்லதுரையுடன் வசித்து வருகிறார்.

செல்லதுரை செங்குறிச்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஆன்லைன் வகுப்பு பயில ஒரு ஆண்டுக்கு முன்பு செல்போன் வாங்கியுள்ளார். ஆன்லைன் வகுப்பு பயின்று வந்த நிலையில் செல்லதுரை செல்போனில் வீடியோ கேம் கற்று கொண்டுள்ளார். தற்போது பள்ளிகள் திறக்கபட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் செல்லதுரை படிப்பில் நாட்டம் காட்டாமல் விடியோ கேம் வினையாட்டிலேயே அக்கறை காட்டி விளையாடி வந்து உள்ளார்.

இதை அறிந்த தாய் அழகம்மாள் செல்போனில் விளையாடுவதை நிறுத்தி விட்டு படிக்க சொல்லி பலமுறை தெரிவித்துள்ளார். அதே போல் கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த செல்லதுரையை தாய் அழகம்மாள் படிக்க சொல்லி திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த செல்லதுரை விவசாயத்திற்காக வைத்திருந்த கண்வலிக்கிழங்கு விதையை சாப்பிட்டுள்ளார்.

இதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்லதுரை சிகிச்சை பலனின்றி டிசம்பர் 2ம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert