அப்பாவுடன் சேர்ந்து வாழ சந்தர்ப்பம் தாருங்கள்! – ஜனாதிபதிக்கு கடிதம்.

அப்பாவுக்கு என்னுடன் சேர்ந்து வாழ ஒரேயொரு சந்தர்ப்பமளித்து உதவுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு உருக்கமான கடிதமொன்றை கைபட எழுதியிருக்கும் தமிழ் அரசியல் கைதியின் மகளான கம்ஷா சதீஸ்குமார், அப்பாவை விடுதலை செய்தால் தாய்நாட்டுக்கு திரும்பி அப்பாவுடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ் – வடமராட்சி இந்து மகளீர் கல்லூரியின் மாணவியான தரம் – 12இல் கல்வி கற்ற தான், தற்போது பிறந்த மண்ணைப் பிரிந்து புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக தாயாருடன் வாழ்ந்து வருவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை கடற்படையைச் சேர்ந்த விஜித நம்புவசத்தின் மகள் பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தின் பின்னர் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தனக்கு மூன்று வயது இருக்கும்போது செ.சதீஸ்குமாராகிய எனது தந்தை புலிகளுக்கு உதவியதாக கூறி கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். அப்பா செலுத்திய வாகனத்தில் சிறிதளவு வெடிமருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு 2011ஆம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள்கால தண்டனை விதித்திருந்தது.

உயிரிழப்போ, வெடிப்புச் சம்பவமோ, வெடிப்பை ஏற்படுத்தும் நிலையோ இல்லாத ஒரு விடயத்துக்கு அப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் எங்களது குடும்பம் வேதனையை அனுபவித்து வருகிறது. அப்பாவை பிரிந்து கடந்த 13 வருடங்களாக இருக்கிறோம்.

எங்களது ஊரான புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியில் நிலவி போர்ச்சூழல் எவ்வாறானது என்பதை நீங்கள் நன்கு அறவீர்கள். அப்பா ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை கைதியாக இருந்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

கடந்த 13 வருடங்களாக அப்பாவின் விடுதலைக்காக அரசியல் அதிகாரிகளின் பாதங்களை பணிந்து, ’அப்பாவுக்கு என்னுடன் சேர்ந்து வாழ ஒரேயொரு சந்தர்ப்பமளித்து உதவுங்கள்” என நான் பலதடவைகள் வேண்டியிருக்கிறேன்.

யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் யுத்தத்தின் வேதனைகளுடனேயே இன்றும் வாழ்ந்து வருகிறோம். எனது அப்பாவைப் போன்றவர்களுக்கு மன்னிப்பளிக்கத் தயங்குவதில்லை என ஐ.நா செயலாளரிடம் நீங்கள் (ஜனாதிபதி) தெரிவித்துள்ள மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் வாக்குப் பலிக்க வேண்டும்.

அப்பா விடுதலை செய்யப்படுவராக இருந்தால் நானும் அம்மாவும் எமது தாய் நாட்டுக்கு திரும்பி சுதந்திர இலங்கையர் என்கிற பெருமிதத்துடன் அப்பாவோடு சேர்ந்து வாழ விரும்புகிறோம்.

தந்தை என்கிற அந்தஸ்த்தை தாண்டி தாங்கள் தாத்தா என்கிற ஸ்தானத்தை அடைந்த உங்கள் பேத்தியை தொட்டுத்தூக்கி அனைத்த அந்தத் தருணம் உங்களை மெய்சிலிர்க்க வைத்ததாக முகநூலில் பதிவிட்டிருந்தீர்கள். மகிழ்ச்சி இதே போன்றதான ஒரு தருணத்துக்காகவே நானும் அப்பாவும் 13 வருடங்களாக காத்திருக்கிறோம்.” எனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert