சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிரான கண்டனப் போராட்டம்- தயாராகும் தமிழ் கட்சிகள்!

வவுனியா வடக்கில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தினை கண்டித்து தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தினை நடத்தவுள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தினை கண்டிக்கும் வகையில் போராட்டத்தினை நடத்துவதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கூடிய தமிழ் தேசியக்கட்சிகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவினுள்ளே அரசாங்கம் 1500 இற்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை குடியேற்றுவதற்கான ஆரம்ப வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இந்த வேலைத்திட்டமானது ஜனாதிபதி வவுனியாவிற்கு வருகை தந்தபோது ஏற்கனவே திட்டமிட்டு குடியேற்றப்பட்ட நாமல்கம மற்றும் பொகஸ்வௌ கிராமத்தை சேர்ந்த சிங்கள மக்கள் நிர்வாக ரீதியாக அனுராதபுரத்திற்கு சென்று தமது கடமைகளை செய்யமுடியாத காரணத்தினால் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் தம்மை உள்வாங்குமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ஜனாதிபதியின் உத்தரவின் பெயரால் இதுவரையும் 300 இற்கும் மேற்பட்ட தென்பகுதியை சேர்ந்த சிங்கள குடும்பங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினுள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் மேலதிகமாக 1500 இற்கும் மேற்பட்டவர்களை குடியேற்றம் செய்யப்படவுள்ள காரணத்தினால் இது இன விகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும். நெடுங்கேணி பிரதேசசபை பறிபோகும் ஆபத்து உள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக கூட பெரும்பான்மை இனத்தவரை கொண்டு வர உள்ளார்கள். ஏற்கனவே இந்த அரசாங்கம் மகாவலி எல் வலயத்தின் ஊடாக மாமடுவில் இருந்து கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருணாட்டுக்கேணி வரை திட்டமிட்டு குடியேற்றத்தினை விஸ்தரிப்பு செய்வதனால் வடக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்.

எனவே இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் வாரம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தவுள்ளோம். நாட்டில் விவசாயிகளுக்கான விவசாய உரமானது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இரசாயன உரத்தினை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும். அதிபர் ஆசியரியர் சம்பள முரண்பாடுகள் உள்ளது. அந்த விடயங்களையும் வலியுறுத்துவதோடு மாகாணசபைக்குரிய அதிகாரங்களையும் மத்திய அரசாங்கம் சுவீகரிக்கவுள்ளது.

ஆகவே எமது பிரதான நோக்கம் சிங்கள குடியேற்றத்தினை மையப்படுத்தியதாக இருந்தாலும் அதனோடு இணைந்து குறித்த விடயங்களையும் கவனத்தில் எடுத்து கவனயீர்ப்ப போராட்டம் இடம்பெறும்.

குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம், வவுனியா மாவட்ட அமைப்பாளர் ந. கருணாநிதி, சிவசோதி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பில் நகரசபை உறுப்பினர்களான எஸ். சந்திரகுலசிங்கம், சு. காண்டீபனும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை தலைவர் இ. கௌதமன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே. அருந்தவராசாவும் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன், பிரதேச சபை உறுப்பினர் எஸ். சந்திரபத்மனும் மாக்ஸிஸ லெனினிச கட்சி சார்பில் பிரதீபனும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் அக்கட்சியின் ஊடக பேச்சாளர் துளசியும் கலந்துகொண்டிருந்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert