இந்திய பெண் சுட்டுக் கொலை
மெக்சிகோ சிட்டி:மெக்சிகோவில் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய பெண் உட்பட இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், வெளிநாட்டு சுற்றுலா பயணியரை கவரும் நகரமாக துலம் நகரம் விளங்குகிறது. இங்குள்ள சாலையோர உணவகத்திற்கு, நேற்று முன்தினம் இரவு வெளிநாட்டு சுற்றுலா பயணியர் சிலர் வந்திருந்தனர்.அப்போது அந்த உணவகத்திற்கு அருகே, இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
போதைப் பொருள் விற்பனைக்காக நடந்த அந்த மோதலில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டனர்; உணவகத்தில் அமர்ந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர் மீது, குண்டுகள் பாய்ந்தன.இந்த சம்பவத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் பெயர் குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.