சீனாவில் மீண்டும் கொரோனா பள்ளி மூடல்; விமானம் ரத்து
பீஜிங்:சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்நிலையில் நம் அண்டை நாடான சீனாவில் பீஜிங் உட்பட ஐந்து மாகாணங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. சீனாவில் ஒரு சுற்றுலா குழு ஷாங்காயில் இருந்து மங்கோலியா வரை பல இடங்களுக்கு சென்றுள்ளது.
இக்குழுவில் இருந்த வயதான தம்பதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா குழு சென்ற ஐந்து மாகாணங்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ளோருக்கு கொரோனா பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அப்பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு கூடங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நுாற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.