கொடும்பாவி எரித்து சுமந்திரனுக்கு எதிர்ப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக யாழ்- குருநகர் மீனவர்கள் இன்று கறுப்பு கொடிகட்டி ஹர்த்தால் அனுஸ்டித்ததுடன் கொடும்பாவியையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உள்ளூர் இழுவை மடி தொழில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்துக்கு எதிராகவே குருநகர்,வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு கூடியிருந்தவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது டன் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டது
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘சுமந்திரன் ஒரு பொய்யன், ஏமாற்றுக்காரன்’, ‘எமது மீனவர் வயிற்றில் அடித்து உனது அரசியலை வளர்க்க முயலாதே’ உள்ளிட்ட சுமந்திரனுக்கு எதிரான பல சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது இது தமிழ் கட்சிகளுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமோ அல்ல என்றும் இது தனி மனிதனுக்கு எதிரான போராட்டம். பலபேருக்கு வாழ்வளிக்கும் இழுவை மடி தொழிலை முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக் கோருவது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எனவும் கருத்து தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக குருநகர் பகுதி முழுவதும் இன்று நண்பகல் வரை வர்த்தகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குருநகர் மீனவர்கள்தொழிலுக்குச் செல்லாமல் ஹர்த்தால் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.