ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை!யாழ் மாநகர சபையில் தீர்மானம்
யாழ். மாநகர சபையின் சொத்தாக இருக்கும் ஆரியகுளத்தில், எந்த மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என, யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு, இன்று ) மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே, இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குறித்த தீர்மானத்தை நாக விகாரையின் விகாராதிபதிக்கு அனுப்பி வைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு கருத்துரைத்த மேயர் மணிவண்ணன், தான் பௌத்த மதத்துக்கு எதிரானவன் அல்ல அல்லது தான் ஒரு மதவாதியும் அல்ல எனவும் கூறினார்.
தான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் எனத் தெரிவித்த அவர், ஆனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்ல எனவும் கூறினார்.
‚என்னை மதவாதி என சித்தரிக்கும் வகையில் நாகவிகாரை விகாராதிபதியால் யாழ். மாநகர மேயர் என எந்தவித மரியாதையும் வழங்காது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
‚எனவே, தவறான புரிதலுடன் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்கள். அப்பகுதி, புனித பிரதேசமாக இருக்க வேண்டும். நான் ஓர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன். அந்த வகையில், நாம் எதிர்காலத்தில் அடையகூடிய தமிழ்த் தேசியத்தை கட்டியெழுப்ப கூடிய ஒரு மதச் சார்பற்ற இடமாக அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற அல்லது தங்களுடைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற இடமாக அமைக்கப்படும்‘ என்றார்.
இதேவேளை, யாழ். நகர மத்தியில் அமைந்துள்ள ஆரியகுளத்தில், சிவபெருமானின் சிலையொன்றை பிரதிஷ்டை செய்து வைக்குமாறு, யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் நித்தியானந்தன், அமர்வில் பிரேரித்தார்.
குறிப்பாக, நாக விஹாரையின் பீடாதிபதி அந்த இடத்தை பௌத்த மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார். அதனைத் தடுப்பதற்காக வருமுன் காப்பதற்காக எதிர்கால நிலைமை காப்பாற்றும் முகமாக நடவடிக்கையாக ஆரியகுள பகுதியில் சிவபெருமானின் சிலையை பிரதிஷ்டை செய்யுமாறும், அவர் பிரேரணையில் கோரியுள்ளார்.
இதற்கு பதில் உரையாற்றிய மேயர் வி.மணிவண்ணன், ‚குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள சிவபெருமானின் சிலை என்பது இந்துக்களின் கடவுள். ஏற்கனவே யாழ்ப்பாணம் நகரத்தில், மும்மத மக்களும் வாழ்கின்ற நிலையில், ஒரு மதத்தை மட்டும் நாங்கள் பிரதிநிதிப்படுத்துவது நல்லதொரு விடயம் அல்ல. அனைத்து மத மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அந்த இடத்தை புனித பிரதேசமாகவும் தூய்மையாகவும் பேணுவதற்கான நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது. எனவே சிவபெருமானின் சிலையை நிறுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்‘ எனத் தெரிவித்தார்.