ஐரோப்பிய யூனியன் தலைவருடன் பிரதமர் மோடி பேச்சு
‚ஜி ௨௦‘ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிக்கேல், ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர்லேயென் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.இத்தாலி தலைநகர் ரோமில் ஜி 20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, நேற்று முன்தினம் இரவு இத்தாலிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். நேற்று காலை இத்தாலியின் ரோம்
நகரைச் சென்றடைந்த மோடி, அங்கு தன் முதல் நிகழ்ச்சியாக, ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்தார்.
ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிக்கேல், ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர்லேயென் ஆகியோருடன், ஐரோப்பிய யூனியன்
மற்றும் இந்தியாவின் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். ஐரோப்பிய கமிஷன் தலைவர் டெர்லேயென் கூறுகையில், “இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது, மகிழ்ச்சியாக உள்ளது. இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவது பற்றி ஆலோசித்தோம்,“ என்றார்.
காந்திக்கு அஞ்சலி
ரோம் நகரில் உள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி நேற்று அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் இந்தியர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது மோடி பேசுகையில், “மஹாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் பாக்கியம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரது சிந்தனைகள், கொள்கைகள், சர்வதேச
அளவில் இப்போதும் பல கோடி மக்களுக்கு ஊக்கத்தையும், தைரியத்தை அளிக்கும் வழிகாட்டியாக உள்ளது,“ என்றார்.
இதை தொடர்ந்து, வாடிகன் நகருக்கு மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் போப் பிரான்சிசை மோடி சந்தித்து பேசினார்.
பிரதமருடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பின் போது, கோவிட், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொது விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.போப் பிரான்சிசை சந்தித்த பிறகு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பு வெகுசிறப்பாக அமைந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.