இராணுவத்தினரின் வாகனத்துடன் ஏற்பட்ட விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்
சமிக்ஞை எச்சரிக்கையின்றி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதியில் தரித்து நின்ற இராணுவத்தினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வேணாவில், புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த மாரிமுத்து பவிசாந் (21 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
நேற்று இரவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மின்சாரம் தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இராணுவத்தினரின் வாகனத்தில் குறித்த இளைஞர் பயணித்த மோட்டார்சைக்கிள் மோதியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.