‚பேரியம்‘ கலந்த பட்டாசுக்கு தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு
அனைத்து பட்டாசுகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்படவில்லை. ‚பேரியம்‘ என்ற வேதிப்பொருள் கலந்த பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது‘ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்க மறுத்தது. அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் வாயிலாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை வாங்கி வெடிக்க அனுமதி அளித்தது.
அதே நேரம், ‚ஆன்லைன்‘ வாயிலாக பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சில நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து உத்தரவை மீறிய ஆறு நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து உச்ச நீதிமன்றம், ‚நோட்டீஸ்‘ அனுப்பியது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்படவில்லை. ‚பேரியம்‘ எனும் வேதிப்பொருள் கலந்த பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்ற பெயரில் மற்றவர்களின் உடல்நலனுக்கு கேடு விளைவிக்க கூடாது.பட்டாசுகள் மீதான தடை உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுவதை மாநில அரசுகள், விசாரணை அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
தடை உத்தரவு குறித்து அனைத்து பத்திரிகை, ‚டிவி‘ உள்ளிட்ட ஊடகங்களில் அரசு விளம்பரங்கள் செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் அதற்கு போலீசார் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.வாழ்வாதாரம் பாதிப்பு!தீபாவளி நெருக்கத்தில் பட்டாசுக்கு தடை விதிக்கப்படுவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எந்த வகையில் பட்டாசு தயாரிக்க வேண்டும் என, 10 மாதங்களுக்கு முன் குழு அமைத்து ஆலோசனை வழங்க வேண்டும்.
அக்குழு அளிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பட்டாசு வகைகளை தயாரிப்பர். தீபாவளிக்கு முந்தைய ஐந்து நாட்கள்தான் பட்டாசு வியாபாரம் நடக்கிறது. 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்து உள்ளதால், பட்டாசு விற்பனையின் போது, அரசு கெடுபிடி காட்டக் கூடாது.