ஆப்கனில் தவிக்கும் 100 இந்தியர்கள்: மத்திய அரசுக்கு கோரிக்கை
ஆப்கனில் சிக்கியுள்ள 100 இந்தியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,“ என, பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகத்திற்கு இந்திய உலக அமைப்பு (ஐ.டபிள்யூ.எப்.,) அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் கடிதம் எழுதி உள்ளன.
இது தொடர்பாக கடந்த 20ம் தேதி எழுதப்பட்ட அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: காபூலில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்கானியர்களிடம் இருந்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் சீக்கிய தலைவர்களுக்கு உதவி கேட்டு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
அவர்கள், கடந்த காலங்களில் இந்தியா வந்துள்ளனர். முறையான விசா உள்ளது. ஆனால், மின்னணு விசா அவர்களுக்கு கிடைக்கவில்லை. சுமார் 100 இந்தியர்கள் (அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட) மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆப்கானிஸ்தானியர்கள் 222 பேர், இந்திய அரசின் உதவியை எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
ஹிந்துக்கள், சீக்கிய சமுதாயத்தினர் உள்ளிட்டவர்களுக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னர் எழுந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலானோர், முறையான விசா வைத்திருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக ஆக.,25க்கு முன்னர் இந்திய தூதரகம் வழங்கிய விசா செல்லாதது ஆகிவிட்டது. இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளனர்.