ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பட்டினியால் இறக்கப்போகிறார்கள்” – ஐநா எச்சரிக்கை

வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து பின்வாங்க ஆப்கானிஸ்தான் அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான அந்நாட்டு மக்கள் பசியால் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஐநா சபையின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி, “ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் சிக்கியுள்ளனர். மேலும், கடந்த இரண்டு மாதங்களாக 14 மில்லியன் மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர். இதனால் குழந்தைகள் இறக்கப் போகிறார்கள், விஷயங்கள் மிகவும் மோசமாகப் போகிறது “ என தெரிவித்தார்.

ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு,  உலக நாடுகளில் இருந்து வந்த பல நிதி பங்களிப்புகள் நின்றுபோனதால் அந்த நாடு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. டேவிட் பீஸ்லி பேசுகையில், “ யாரும் எதிர்பார்த்ததை விட வேகமாக காபூல் வீழ்ச்சியடைந்தது, பொருளாதாரம் அதை விட வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆப்கன் நிர்வாகம் நிதிகளை திறந்துவிட வேண்டும், அப்போதுதான் மக்கள் வாழ முடியும்“ என தெரிவித்தார்.

குளிர்காலம் நெருங்குவதால் கிட்டத்தட்ட 23 மில்லியன் பலவீனமான மக்களுக்கு ஓரளவு உணவளிக்க ஒரு மாதத்திற்கு 220 மில்லியன் டாலர் வரை தேவைப்படும் என ஐநா உணவு நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert