நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

ஆரியகுளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆரிய குளத்தின் புனரமைப்புப் பணிகளில் அண்மைக்காலமாக நாகவிகாரை தலையிட்டு வருவது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது. குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர், இப்போது குளத்தின் பருத்தித்துறை வீதிப்பக்கமாக நடைபாதை அமைக்கப்பட்டு வருவதை உடனடியாக நிறுத்துமாறும், குளத்தைச் சுற்றுலாத் தேவைகளின் பொருட்டுப் பயன்படுத்தக்கூடாது என்றும் மாநகர முதல்வருக்குக் கடிதம் மூலம் கட்டளை பிறப்பித்துள்ளார். ஆரியகுளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆரியகுளம் நாகவிகாரைக்கு உரித்தான குளம் அல்ல. ஆன்மீகத் தேவைகளின் பொருட்டு வேறு ஆலயங்களால்; உருவாக்கப்பட்ட குளமும் அல்ல. இது மழைநீர் சேகரிப்பு மற்றும் வெள்ள நீர்முகாமைத்துவத்தில் தமிழ் மக்கள் கொண்டிருந்த அறிவைப் பறைசாற்றுகின்ற பண்டைய குளங்களில் ஒன்றாகும். வேறு குளங்களில் இருந்து படிமுறைகளில் நிரம்பி வழிகின்ற மழை நீரைச் சேகரிக்கும் பொருட்டும், மிகை மழைநீரைக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் யாழ்நகர் வெள்ளத்தினுள் மூழ்காதிருக்கும் பொருட்டும் அமைக்கப்பட்ட குளம் ஆகும்.

ஆரியகுளம் தொடர் பராமரிப்பின்மையால் நாற்றமெடுக்கும் கழிவுக்குளமாக மாறி நிலத்தடி நீர் மாசுபாட்டையும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வந்ததால் இது புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பலதரப்பும் பலகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது. தற்போது புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ள யாழ் மாநகரசபை, குளம் யாழ்நகர மையத்தில் நுழைவாசலில் அமைந்திருப்பதால் அதனை மக்களைக் கவரும் சூழல்சார் சுற்றுலா மையமாக அமைத்து வருகிறது. இதனை விரும்பாத விகாராதிபதி அபிவிருத்திப் பணிகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்.

ஆரியகுளத்தில் ஒரு காலத்தில் பிக்குகள் நீராடினார்கள் என்ற கருத்தைப் பரப்புவதன் மூலம் குளத்தின் மீது உரிமை கொண்டாட முயலும் விகாராதிபதி அபிவிருத்திப் பணிகளை நிறுத்துவதற்கு அல்லது தமக்குரியதாக மாற்றி அமைப்பதற்கு யாழ்மாநகர சபையை வற்புறுத்தி வருகிறார். இலங்கையில் பௌத்தத்துக்கே முதலிடம் என்ற வகையில் இவர் யாழ்மாநகர சபையின் மீது அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் கூடும்.

ஆனால், யாழ்மாநகர சபை குளத்தின் அருகேயுள்ள மக்கள் குடியிருப்புகளினதும் வணக்கத் தலங்களினதும் இயல்பு நிலையைச் சீர்குலைக்காத வகையிலும், பண்பாட்டுப் பிறழ்வுகளை ஏற்படுத்தாத வகையிலும் அபிவிருத்திப் பணிகளை உறுதி செய்துகொண்டு எவ்விடர்வரினும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப்பணிகளின் பின்   காணப்படுகின்ற தற்போதய நிலை பற்றிய காணொளி

https://youtu.be/CYVgU-U7F3c

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert