உகாண்டாவில் இரட்டை குண்டு வெடிப்பில் 3 பேர் பலி
இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அருகே குண்டுவெடிப்பு நடைபெற்றதால் உகாண்டாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கியுள்ளனர்.
அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள ஒரு ஓட்டலில் இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் அருகே நேற்று குண்டுவெடிப்பு நடைபெற்றது. வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டல் அருகே நிறுத்திய பயங்கரவாதி வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்தான். இந்த வெடிகுண்டு தாக்குதல் உகாண்டாவின் தலைமை காவல் நிலையம் அருகே நிகழ்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், அந்நாட்டின் பாராளுமன்றம் அருகேயும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை காரில் கொண்டு வந்த பயங்கரவாதி பாராளுமன்றம் அருகே அதை வெடிக்கச்செய்தான். இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஓட்டல் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய பாரா பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.