வீடு புகுந்து முல்லைத்தீவில் தாக்குதல்
முல்லைத்தீவில் வீட்டிலிருந்த பெண்கள் மீது வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவின் தீர்த்தக்கரை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (03) இரவு 8.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில், 7 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
வீட்டிலிருந்த பொருட்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, வீட்டிலிருந்த குடும்ப பெண்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்ட நிலையில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைவிட வீட்டில் இருந்த 16 வயதான பெண்பிள்ளையை குறித்த கும்பல் வீட்டின் வெளியே இழுத்துச் சென்ற போது வீட்டிலிருந்த 13 வயதான சிறுமி அவர்கள் மீது தூளினை வீசி தனது அக்காவை காப்பாற்றியுள்ளார்.
இதனைவிடவும் குறித்த வீட்டிலிருந்த கர்ப்பவதி தாய் ஒருவரும் குறித்த தாக்குதலால் அச்சமடைந்து கருவிலுள்ள குழந்தைக்கு என்ன ஆனதோ என தெரிவிக்கின்றார்.
இவ்வாறான காட்டுமிராண்டி தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர்கள் 1990 அவசர நோயாளர்காவு வண்டி ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த வீட்டிலிருந்தவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் மேற்கொண்டவர்களை அடையாளம் காட்டி 119 ஊடாக தகவல் தெரிவித்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினரிடம் தெரிவித்தும், முறைப்பாடு செய்தும் தாக்குதல் நடத்திய – சிறுவர் துஸ்பிரயோகம் மேற்கொண்ட குறித்த கும்பல் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தாம் வீட்டில் இருக்க அஞ்சுவதாகவும் குறித்த வீட்டில் இருக்கும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை விடவும் குறித்த கிராம மக்களும் இவ்வாறான காட்டு மிராண்டித் தாக்குதல்களால் அச்சமடைந்துள்ளதாகவும், இவ்வாறு சிறுமி மீது வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் எமது பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாது இருக்க வழிவகுக்க வேண்டுமெனவும் கோருகின்றனர்.