இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்ட தமிழ் மன்னன்..!!
எல்லாளன் கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது.
மகாவம்சத்தின் படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஆவான். இவன் “பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்” சேர்ந்தவன் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் என்று சிலர் கருதுகிறார்கள்.
அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.
இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் “மகாவம்சம்.” சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று
அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
புகழ் பெற்ற தமிழ் மன்னன்இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட “மகாவம்சம்” நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மன்னன் எல்லாளன் பற்றி மகாவம்சம் கூறுவதாவதுஎல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந்தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.
ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, “உன் குறை என்ன?” என்று கேட்டான்.”உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்” என்று கூறினாள்.அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)
ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.உடனே மந்திரிகளை அழைத்து, “புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்’ என்றான்.அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். “நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்” என்று கூறினர். “நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்” என்று தெரிவித்தார்கள்.மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.
துட்ட காமினி (துட்ட கைமுனு)இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.
தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. “எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்” என்று தகவல் அனுப்பினார். இதனால் சீற்றம் அடைந்த துட்ட காமினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.
சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.துட்டகாமினியை கோட்டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவ செய்யப்பட்டது. அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின.
போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.”நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்” என்றான்.போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.
இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான்.
அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.”இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்” என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.
இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.தள்ளாத வயதிலும் மாமன்னன் எல்லாளன் போர் செய்து சிங்களப் படையிடம் அனுராதபுரம் வீழ்ந்துவிடக்கூடாதென்ற இலட்சியத்தோடு மாண்டான். “வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் இருப்பதால் கால்நீட்டி நிம்மதியாக எப்படி படுப்பது?” என சின்ன வயதிலேயே இனவெறி ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட உருகுணை இராசகுமாரன் துட்டகாமினியால் உத்தரதேசக் கிழவன் எல்லாளனின் ஈட்டி எறிதலுக்கும் வாள் வீச்சுக்கும் ஈடுகொடுக்கமுடியவில்லை.
வகைதொகையின்றி மாண்டுபோனது அவனின் படைகள். இறுதியில் கிழவனை தனிப்போருக்கு அழைத்த துட்டன் தனது யானைக்கு மதமேற்றி வீரத்திற்கு மாறாக எல்லாளனின் போர் யானையுடன் மோதவிட்டான். இதைச் சற்றும் எதிர்பாராத மன்னனின் போர் யானை நிலைகுலைந்துபோகவே மன்னன் எல்லாளனும் நிலைகுலைந்து தன் கிழட்டு உடலைச் சமப்படுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டான். இந்த தருணத்தைப் பயன்படுத்திய துட்டன் எல்லாளனின் மார்பை ஈட்டியால் துளைத்தான்.
நீண்ட வரலாறொன்று அன்றுடன் புதையுண்டுபோனது. தமிழரின் பூர்வீக இருப்பு உருகுணை ஆக்கிரமிப்பாளர்களிடம் மொத்தமாக வீழ்ந்துபோனது. அனுராதபுர உதயமானது. தள்ளாத வயதுடைய கிழவன் எல்லாளனை தன்னால் தனிப்போரிட்டும் வெல்லமுடியவில்லையே என துட்டகாமினியின் மனச்சாட்சி உறுத்தியது.
ஆதலால் எல்லாளனுக்கு நினைவுத்தூபி எழுப்பி தானே மரியாதை செலுத்தியதுடன் தன் இனத்தாரையும் மரியாதை செலுத்த பணித்தான். ஒரு துஷ்டனைக்கூட மனம் மாற்றியது எல்லாளனின் வீரம் மட்டுமல்ல, அவனிடமிருந்த நேர்மையும் இனப்பற்றும்தான்.