முதல் விற்பனையில் விற்றுத்தீர்ந்த ஒப்போ பைண்ட் என்
ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான பைண்ட் என் முதல் விற்பனையில் விற்றுத்தீர்ந்தது.
ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. ஓரளவு குறைந்த விலையில் அறிமுகமான நிலையில், இந்த ஸ்மார்ட்போன் முதல் விற்பனையிலேயே விற்றுத்தீர்ந்தது. முதல் விற்பனை நிறைவுற்ற நிலையில், இதே ஸ்மார்ட்போன் மறுவிற்பனைக்கு (செகண்ட் ஹேண்ட் சேல்ஸ்) ஆன்லைன் தளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் விலை அதிகமாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் ஒப்போ பைண்ட் என் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த மாடல் ஆகும். இந்த மாடலை கொண்டு ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. இந்த பிரிவில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ஒப்போ பைண்ட் என் மாடல், கேலக்ஸி இசட் போல்டு 3 சீரிஸ் விலையை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒப்போ நிறுவனம் தனது பைண்ட் என் மாடலை குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்த யூனிட்களும் விற்பனை துவங்கிய சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒப்போ பைண்ட் என் ஸ்மார்ட்போன் 8 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 12 ஜி.பி., 512 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.