முல்லை பெரியாறு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்
அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அணையின் உறுதி குறித்து விமர்சனம் செய்து வரும் கேரளா அரசு 142 அடி தண்ணீர் வரை தேக்க முடியாது என்று கூறி வருகிறது. ஆனால், தமிழக அரசு 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கும் முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.
இதற்கிடையே, பருவமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க, 139 அடி நிரம்பியதும் தமிழக அதிகாரிகள் அனுமதியுடன் கேரள அரசு அணையை திறந்தது. தமிழக அதிகாரிகள் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாது அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை வலுப்படுத்த அங்குள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை. இதற்கு முதலில் அனுமதி அளித்த கேரள அரசு பின்னர் எதிர்ப்பு கிளம்பியதால், தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்திறப்பு, பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழக கட்டுப்பாட்டிலே உள்ளது.