மன்னாரில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான்
மன்னாரில் நாளை (27) சனிக்கிழமை மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்றைய தினம்(26) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதவான் நிராகரித்துள்ளார்.
தமக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நாளைய தினம்(27) ஆம் திகதி மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உப- தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராக மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்க கோரி மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம்(26) விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் போதிய சாட்சிகள் மன்றில் சமர்ப்பிக்கப்படாமையினால், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்தார்.