ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம்! – சஜித் சூளுரை.
கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ராஜபக்ச குடும்ப அரசு வீட்டுக்குச் செல்லும் வரை அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும். ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்கி தாய்நாட்டையும், மக்களையும் காப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ சூளுரைத்துள்ளார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஏற்பாடு செய்த அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பட்டினியால் வாடவேண்டிய நிலைமை இன்று நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்கவேண்டிய வரிசை யுகமும் உருவாகியுள்ளது. ஆனால் ‘கொமிஷ்’ மூலம் ஆட்சியை முன்னெடுக்க ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர்.
ஊழல், மோசடிகளுக்கு எமது ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். பெயர்களை பார்த்து பதவிகள் வழங்கப்படாது. திறமைக்கே முன்னுரிமையும், முதலிடமும் வழங்கப்படும். மக்கள் ஆட்சி ஊடாக மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் யுகத்தை உருவாக்குவோம்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் போராட்டத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள். இது எமது தாய் நாடு. இங்கு வாழ்பவர்கள் எமது மக்கள். எனவே, தாய் நாட்டை காக்க, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புத்தாட்சியை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்“ – என்றார்.