கோயில் நிலங்களை மீட்க புதிதாக 108 அரசு பணியிடங்கள் தமிழகத்தில் உருவாக்கம்
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “சட்டப்பேரவையில் 2021-22 பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத் துறை மானியக்கோரிக்கையின்போது, கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் வட்டாட்சியர் உட்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்படும்.
இதற்கான செலவு ரூ.8.18 கோடி என்று அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்தும் வகையில், அறநிலையத் துறையின் மாவட்ட அளவிலான 36 உதவி ஆணையர் அலுவலகங்களிலும் தலா ஒரு வட்டாட்சியர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் பணியிடம் என மொத்தம் 108 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கலாம். அதில் 36 வட்டாட்சியர் பணியிடங்களை வருவாய் துறை மூலம் அந்தந்த மாவட்ட அலகிலிருந்து மாற்றுப் பணி அடிப்படையில் நிரப்பலாம் என்று அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடப்படுகிறது.
அறநிலையத் துறையில் தோற்றுவிக்கப்படும் வட்டாட்சியர் பணியிடங்களுக்கு பணி விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு வருவாய் சார்நிலை பணிவிதிகளில் அமைந்துள்ள வட்டாட்சியர்களை கொண்டு அந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக உரிய செயற்குறிப்பு அனுப்புமாறு அறநிலையத்துறை ஆணையருக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.