மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் !
மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவு தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
தற்போது பெய்து வரும் பலத்தமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து பாதியாக குறைந்து.
இதனால் தக்காளி விலை திடீரென அதிகரித்தது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரையிலும், வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் கனமழை இல்லாததால் கடந்த 3 நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது . இதனால் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து இருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கி இருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்று குறைந்தது. 51 லாரிகளில் மட்டும் தக்காளி விற்பனைக்கு வந்தது. சாதாரண நாட்களில் 60 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.60-க்கும், சில்லரை கடைகளில் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மீண்டும் கவலை அடைந்து உள்ளனர். மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-
தமிழகத்தில் தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் பழனி, ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட வியாபாரிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக தக்காளி தேவை அதிகரித்து உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் மீண்டும் 2 நாட்களாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.