சூரியன் எவ்வளவு தூரம்?
பூமியானது சூரியனைச் சுற்றிச் சுற்றிவருகிறது. ஆனால் பூமி சுற்றும் பாதையானது கன கச்சிதமான வட்டமாக இருப்பது இல்லை. மாறாக அது சற்றே நீள் வட்டமாக (ellipse) உள்ளது. இதன் விளைவாக பூமியிலிருந்து சூரியன் உள்ள தூரம் ஆண்டில் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது.
2018 –ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியன்று பூமியானது ஒப்புநோக்குகையில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும். அன்றைய தினம் சூரியனுக்கு உள்ள தூரம் 14 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் 2018 ஜூலை 6-ம் தேதியன்று பூமியானது ஒப்புநோக்குகையில் மிகத் தொலைவில் இருக்கும். அன்றைய தினம் சூரியனுக்கு உள்ள தூரம் சுமார் 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும்.
அதாவது ஜனவரியில் உள்ள தூரத்துக்கும் ஜூலையில் உள்ள தூரத்துக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 50 லட்சம் கிலோ மீட்டர். பூமியின் சுற்றுப்பாதை சற்றே நீள் வட்டமாக உள்ளது என்பதை இது காட்டுகிற்து. ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரத்தில்தான் சூரியன் நமக்கு அருகாமையில் இருந்துவருகிறது.
ஜனவரியில் சூரியன் நமக்குப் பக்கத்தில் இருக்கிறது என்று சொல்கிறீர்களே, ஜனவரியில் தானே நல்ல குளிர் அடிக்கிறது, அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். சூரியனுக்கு அருகில் இருந்தால் வெயில்தானே கடுமையாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் கேட்கலாம்.
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஜனவரியில் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள நாடுகளில்தான் குளிர் காலம். பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே இருக்கிற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, அர்ஜெண்டினா முதலான நாடுகளில் அப்போது நல்ல வெயில் காலம்.
சூரியனுக்கு உள்ள தூரத்துக்கும் பூமியில் குளிர்காலம், வெயில் காலம் ஏற்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. குளிர்காலமும் வெயில் காலமும் பூமியின் சாய்மானத்தால் ஏற்படுவதாகும். பூமியானது 23 டிகிரி சாய்ந்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது. அந்த அளவில் சூரியனின் கிரணங்கள் செங்குத்தாக விழுகிற பகுதிகளில் கோடைக் காலம் ஏற்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை, ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் சூரிய கிரணங்கள் செங்குத்தாக விழுகின்றன. எனவே அந்தப் பகுதிகளில் கோடைக்காலம் நிலவுகிறது.
அதே பகுதிகளில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சூரிய கிரணங்கள் மிகவும் சாய்வாக விழுகின்றன. எனவே அந்த மாதங்கள் குளிர்காலமாக உள்ளது.
பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ள நாடுகளில் இதற்கு மாறான நிலைமை உள்ளது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் அவர்களுக்கு நல்ல வெயில் காலமாகவும் ஏப்ரல், மே, ஜூன் முதலான மாதங்கள் நல்ல குளிர் காலமாகவும் உள்ளன.
பூமியானது சூரியனைச் சுற்றி வருகையில் ஆண்டில் எல்லா நாட்களிலும் ஒரே சீரான வேகத்தில் செல்வதாகக் கூற முடியாது. சூரியனை நெருங்குகையில் அதன் வேகம் அதிகரிக்கிறது. அப்போது அதன் வேகம் வினாடிக்கு 30.3 கிலோ மீட்டராக உள்ளது. இது ஜூலையில் இருக்கக்கூடிய வேகத்தை விட வினாடிக்கு ஒரு கிலோ மீட்டர் அதிகம்.
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் எந்த அளவுக்குச் சூரியனிலிருந்து தொலைவாக உள்ளதோ அந்த அளவுக்கு அவற்றின் வேகம் குறைவாக இருக்கும். இது இயற்கை விதி. இதனை ஜெர்மன் விஞ்ஞானி ஜோகன்னஸ் கெப்ளர் (1571-1630) பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்.
பூமியின் சாய்மானம் எப்போதும் 23 டிகிரி அளவில் இருப்பது கிடையாது. பல ஆயிரம் ஆண்டுகளில் அது மாறிக்கொண்டே இருக்கிறது. தவிர, பூமியின் சாய்மானம் நேர் எதிர்ப்புறத்துக்கு மாறலாம். அப்படி மாறினால் பருவங்களும் மாறும். இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் டிசம்பர், ஜனவரி மாதம் கோடைக் காலமாக மாறிவிடும். ஏப்ரல், மே மாதங்கள் கடும் குளிர் காலமாக மாறிவிடும். இப்படியான மாற்றம் பல ஆயிரம் ஆண்டுகளில் மெல்ல நிகழ்வதாக இருக்கும். எனவே தாவரங்கள் மெல்ல புதிய நிலைமைக்கு மாறிவிடும்.
பூமியின் சுற்றுப்பாதை மட்டுமல்ல, பூமியைச் சுற்றி வருகிற சந்திரனின் சுற்றுப்பாதையும் இப்படி நீள் வட்டமாகத்தான் இருக்கிறது. சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும்போது சந்திரனுக்கு உள்ள தொலைவு 3,56,509 கிலோ மீட்டர். மிகத் தொலைவில் இருக்கும்போது சந்திரனுக்கு உள்ள தூரம் 4,06,662 கிலோ மீட்டர்.