(பிறப்பு1832 – இறப்பு 1901)

யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார். ‚தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன?‘ என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். பதிப்புப் பணியில் முன்னோடியாய், பத்திரிகைப்பணியில் முன்மாதிரியாய்த் திகழ்ந்த அப்பெரியார்

செந்தமிழ்ச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை ஆவார்.

தாமோதரம் பிள்ளை, தமது இருபதாவது வயதிலேயே ‚நீதிநெறி விளக்கம்‘ எனும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தக் கவர்ந்தார்.

1868 ஆம் ஆண்டு, தமது முப்பத்தாறாம் வயதில், தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையைப் பதிப்பித்தபோது, நல்லூர் ஆறுமுக நாவலரின் அறிவுரையை ஆதாரமாகக் கொண்டார், தாமோதரம்பிள்ளை. அதனைத் தொடர்ந்து ‚வீரசோழியம்‘, ‚திருத்தணிகைப் புராணம்‘, ‚இறையனார் அகப்பொருள்‘, ‚தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி, தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை ஆகிய பழமையான நூல்களச் செம்மையாகப் பதிப்பித்து, புலமை கொண்ட சான்றோரின் புகழ்க் கைக்கொண்டார் தாமோதரம்பிள்ளை.

பிள்ளைவாளின் பேரார்வமும், பேருழைப்பும் – பேணுவாரற்று நீர்வாய்ப் பட்டும், தீவாய்ப்பட்டும், செல்வாய்ப்பட்டும் அழிந்து வந்த தமிழ் ஏடுகளை, தனிப் பெரும் பழைய இலக்கியங்களைத் தமிழ் மக்களுக்கு அரிய சொத்துகளாக்கின. எடுக்கும்போதே ஓரம் ஓடியும்; கட்டை அவிழ்க்கும் போதே இதழ் முறியும். புரட்டும் போதே திண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துக்களோ வாலும் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை உழுது கிடக்கும். இத்தகைய நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளை, பூக்களைத் தொடுவதுபோல் மெல்ல மெல்ல அலுங்காமல் நலுங்காமல் பிரித்தெடுத்து, பிரதி செய்து, பதிப்பித்த அப்பெருந்தகை, ‚தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?‘ எனத் தமிழறிஞர்களைப் பார்த்துக் கேட்டார்.

திருக்குறள், திருக்கோவையார், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களப் பதிப்பித்துத் தமிழுக்கும், சைவத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளைக்குப் பதிப்புத்துறையில், வழிகாட்டியாக அமைந்தார். தொல்காப்பியத்தப் பதிப்பித்தபோது, ‚தமிழ் நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும், நான் தேடிகணட வரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, உலோகோபகாரமாக அச்சிடலானேன்‘ என அப்பெருமகனார், தமது தொல்காப்பியச் சேனாவரையருரைப் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, எண்ணிப் பார்க்கத்தக்கது. ‚தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும்‘ என்ற அரிய நோக்கங்களால், உரிய தொண்டாற்றிய ஒரு பெரும் தமிழார்வலராய்த் திகழ்ந்தார், தாமோதரம்பிள்ளை.

ஏட்டுப் பிரதியிலிருப்பதை, அச்சுருவம் பெறவைத்தல் எளிமையானதன்று. முதலில் ஏட்டிலுள்ள எழுத்துக்களைப் படிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். விளக்கத்தோடு அதனை வெளியிடத் தனிப்புலமை வேண்டும். திறமையும் புலமையும் கொண்டிருந்த தாமோதரனார், பதிப்புத் துறையில் நாட்டம் செலுத்தியதோடு, படைப்பாற்றலிலும் ஆர்வம் மிகக் கொண்டு, பல நூல்களை எழுதி வெளியிட்டார்.

‚கட்டளைக் கலித்துறை‘, ‚சைவ மகத்துவம்‘, ‚சூளாமணி வசனம்‘, ‚நட்சத்திர மாலை‘ ஆகிய நூல்களையும் ‚காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி‘ எனும் நாவல் ஒன்றையும் இயற்றி வெளியிட்டுச் செய்யுள் திறத்திலும், உரைநடை வளத்திலும் ஓங்கு புகழ் பெற்றார். தாமோதரம்பிள்ளையின் செய்யுளில் அமைந்த செறிவை, ஒருமுறை மாயூரம் வேதநாயகம் பிள்ளை படித்துப் பரவசமடந்து,

நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் –

வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ –

பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்

கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!“

என எழுதி, பாடலைத் தாமோதரம்பிள்ளைக்கு அனுப்பி வைத்தாராம்.

ஏட்டுப் பிரதிகளைப் படித்து, பரிசோதித்து, பலபடியாக ஆராய்ந்து, வழுவின்றிப் பிரதி செய்கிறபோது. சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அதனைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காது, மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் பிள்ளைவாள்! இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறிந்திராத காலம் அது. எட்டுத் தொகையில் அடங்கிய எவை எவையெனக் கூடத் தெரியாத காலம். இன்னும் சொல்லப்போனால், ‚சிலப்பதிகாரமா‘, ‚சிறப்பதிகாரமா‘ என மயங்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய காலக்கட்டத்தில் ஐயங்களைப் போக்கிக்கொள்ள யார் அகப்படுவர்? எனவேதான் „எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி!“ எனத் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதபிள்ளையின் மகனாக, 1832 ஆம் ஆண்டில் பிறந்தார், தாமோதரம்பிள்ளை. அன்னையார் பெயர், பெருந்தேவி அம்மாள்.

பன்னிரண்டு வயதிற்குள்ளாகவே தமிழில் சில இலக்கிய, இலக்கண நூல்களத் தமது தந்தையாரிடமே முறையாகப் பயின்ற தாமோதரம்பிள்ளை, கவிராயர் முத்துக்குமாரரிடம் உயரிய இலக்கண, இலக்கியங்களக் கற்றுக் கொண்ட பின், அமெரிக்க மிஷன் பாடசாலையில் சேர்ந்து ஆங்கிலம் படித்தார். பின்னர் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்து ‚செமினறி‘ என வழங்கிய சாத்திரக் கலாசாலையில் கணிதம், அறிவியல் ஆகியவற்றை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். கோப்பாய் சக்தி வித்தியாசாலையில், ஆசிரியர் பணியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் ‚நீதிநெறி விளக்கம்‘ என்னும் நூலினைப் பதிப்பித்து வெளியிட்டு, ‚தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி‘ எனும் பெருமை பெற்றார். இளைய பருவத்தில் தாமோதரனார் கொண்ட நூல் வெளியீட்டு ஆர்வமே, தமிழ் மக்களுக்குத் தொல்காப்பியத்தையும், கலித்தொகையையும் நூல் உருவில் பெற்றுத் தந்தது. அழிந்து மறைந்து கொண்டிருந்த ஏட்டுச் சுவடிகள் பல, அச்சு வாகனமேறி, தமிழுக்குத் தனிப் பெருமையைக் கூட்டின!

யாழ்ப்பாணத்துப் பாதிரியார் ‚பேர்சிவல்‘, ஆறுமுக நாவலரைக் கொண்டு தமிழில் பைபிளை வெளியிட்டதை அறிவோம். அந்தப் பாதிரியார் சென்னைக்குக் குடியேறி, ‚தினவர்த்தமானி‘ எனும் தமிழ்ப் பத்திரிகையை நடத்தி வந்தார். அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்க, தாமோதரம்பிள்ளைக்கு அழைப்பு வரவே, அழைப்புக்கு உடன்பட்டு சென்னை சென்று, ஆசிரியர் ஆனார். ஆசிரியராக வீற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பிள்ளைவாள், சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.

தாமோதரம்பிள்ளை பத்திரிகை ஆசிரியராகவும், கல்லூரித் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப் பெற்று, முதன் முதலாகத் தொடங்கிய ‚பி. ஏ.‘ தேர்வில், மாநிலத்தின் முதல் மாணவராக வெற்றி பெற்றார். பின்னர் 1871 இல் ‚பி.எல்.‘ தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் ‚ராவ் பகதூர்‘ பட்டமளித்துப் பாராட்டினர்.

தாமோதரம் எந்தப் பணி ஆற்றினாலும், தமது சொந்தப் பணியாகக் கருதி ஏடு தேடுவதை, சுவடிகளைப் பிரதி எடுப்பதை, விளக்கமுடன் பதிப்பித்து வெளியிடுவதைத் தொடர்ந்து ‚உயிர்த் தொண்டாக’க் கருதி, இரவு பகல் பாராது, தாகத்துடன் பாடுபட்டு, உழைத்துத் தமிழ் மொழியைச் செழுமைப்படுத்தினார். பொறாமை கொண்ட சிலர், அப்பெருமகனாரின் பணியைக் குறைத்து மதிப்பிடினும், தமிழறிஞர் உலகம், செயற்கரிய செயலைத் தெளிவாக உணர்ந்து, தாமோதரம்பிள்ளையைச் ‚செந்தமிழ்ச் செம்மல்‘ எனப் பாராட்டி, போற்றி மகிழ்ந்தது.

தன்னரிய தமிழுக்குப் பன்னலம் பெருகச் செய்து, பதிப்புத் துறையின் ‚முன்னோடி‘ எனப் புகழ் பெற்றுத் தமது அறுபத்தி ஒன்பதாம் வயதில், 1901 ஆம் ஆண்டில் தாமோதரம்பிள்ளை மறைந்தார். மறைந்தது அப்பெருந்தகையின் உடல் மட்டுமே. அப்பெருமகனார் உருவாக்கிய நூல்களும், ஊட்டிய உணர்வுகளும் என்றென்றும் மறையாதவை; ஆம், தமிழும், தமிழரும் உள்ளவரை நிலையானவை.

எழுதியவர்: குன்றக்குடி பெரியபெருமாள்

(‚தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்‘ நூலிலிருந்து தொகுக்கப்பட்டது)