கார்த்திகை மாதம் சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து ஐய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நேற்று முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம் மற்றும் களபாபிஷேகம், உச்ச பூஜை போன்றவை நடந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு படி பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சபரிமலையில் தரிசனத்திற்கு இதுவரை 13 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தினசரி 30 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அப்பம், அரவணை தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. தட்டுப்பாடு இன்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். இதன்படி சென்னை முதலான பல ஊர்களிலும், காலையிலேயே ஆலயங்களில் குவியத் தொடங்கினார்கள் பக்தர்கள்.
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயம், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் முதலான ஆலயங்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து மாலையணிந்து கொண்டார்கள். மேலும், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில், மதுரையில் உள்ள ஐயப்பன் ஆலயம் மற்றும் பல கோயில்களிலும் மாலையணிந்து கொண்டு விரதத்தைத் துவக்கினார்கள் பக்தர்கள்.
மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும்.
இதனிடையே கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சபரிமலை எருமேலி சாஸ்தா கோவிலில் பேட்டை துள்ளல் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பேட்டை துள்ளல் தொடங்கியது. உடலில் வண்ண சாயங்கள் பூசி பக்தர்கள் பேட்டை துள்ளலில் ஈடுபட்டனர்.
சபரிமலை கோயிலில் சாமி தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து ஐயப்ப பக்தர்கள் செல்கின்றனர். குறிப்பாக சபரிமலை செல்லும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும். அதனை கடைபிடித்து பக்தர்கள் செல்கின்றனர்.
சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய நாள் ஒன்றிற்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏற்கனவே ஆன்லைன் புக்கிங் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.