காற்று இல்லாத இடம் உண்டா?

பூமியில் காற்று இல்லாத இடமே கிடையாது. கெட்டியான பாறைக்குள் காற்று கிடையாதுதான். ஆனால் நீங்கள் பாறையில் ஆழமான துளை போட்டால் அல்லது சுரங்கம் தோண்டினால் அதற்குள் முதலில் நுழைவது காற்றாகத்தான் இருக்கும்.

ஒரு பாட்டிலில் சர்க்கரை இருக்கிறது. சர்க்கரை மொத்தத்தையும் ஒரு தட்டில் கொட்டிய பிறகுஅதை நாம் காலி பாட்டில் என்கிறோம். அது காலி பாட்டில்தான். ஆனால் அதற்குள்ளாகக் காற்று இருக்கிறது. காலி டின்காலி தம்ளர் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். ஒரு தம்ளரிலிருந்து தண்ணீரைக் கொட்டும் போதே அதற்குள் காற்று புகுந்துகொள்கிறது. இதில் காற்று மிகவும் அவசரம் காட்டும்.

மளிகைக் கடையில் காணப்படும் பெரிய எண்ணெய் டின்னில் எண்ணெய் இருக்கிற வரையில் உள்ளே காற்று கிடையாது. அந்த டின்னின் திறப்பு வழியே பெரிய டிரம்மில் எண்ணெயை ஊற்ற முற்படும்போது காற்று அவசர அவசரமாக அந்த டின்னுக்குள் நுழைய முயலும். எனவேதான் டின்னிலிருந்து எண்ணெயானது குபுக் குபுக் என்று விட்டு விட்டு வெளிப்பட முற்படும். அந்த டிரம்மின் வாய் பெரியதாக இருந்தால் பிரச்சினை இல்லை.

ஆனால் வாய் சிறியதாக இருந்தால் எண்ணெய் வெளியே சிந்துவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே வியாபாரிகள் எண்ணெய் டின்னின் திறப்புக்கு நேர் எதிர்ப்பக்கத்தில் சிறிய ஓட்டை போட்டுவிட்டு எண்ணெயை டிரம்மில் ஊற்றுவர். அந்தச் சிறிய ஓட்டை வழியே காற்று உள்ளே செல்லும்போது டின்னின் திறப்பு வழியே எண்ணெய் சீராகத் தொடர்ந்து வெளிப்படும். அதாவது டின்னுக்குள் காற்று நுழைய நீங்கள் தனி வழி ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறீர்கள்.

காற்று இல்லாத இடத்தை நாம் செயற்கையாக உண்டாக்கினால்தான் உண்டு. அப்படி ஏற்படுத்துவது மிகவும் கடினம். உங்கள் வீட்டில் கிட்டத்தட்ட காற்று இல்லாத இடம் ஒன்று இருக்குமானால் அது தெர்மாஸ் பிளாஸ்க். இந்தக் குப்பி இரண்டு சுவர்களால் ஆனது. இந்த இரண்டு சுவர்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட காற்றே இல்லை. இந்த பிளாஸ்குக்கு வாக்குவம் பிளாஸ்க் என்ற பெயரும் உண்டு.

வாக்குவம் (vacuum) என்றால் காற்றில்லாத வெற்றிடம் என்பது பொருள். வெற்றிடம் வழியே வெப்பம் செல்லாது. எனவேதான் இப்படியான வெற்றிடக் குப்பியில் ஊற்றி வைக்கப்படும் காபி போன்ற சூடான பானம் வெகு நேரம் ஆறுவதில்லை. இப்படிக் குப்பியில் சூடான பொருள் மட்டுமன்றிஐஸ் கட்டி அல்லது மிகக் குளிர்ந்த பொருளையும் வைத்திருக்கமுடியும்.

ஆரம்பக் காலத்தில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் பல்புகளில் கிட்டத்தட்ட வெற்றிடம் இருந்தது. பின்னர் ஆர்கான் போன்று விசேஷ வாயுக்கள் அடங்கிய பல்புகள் தயாரிக்கப்பட்டன. சோடியம் ஆவிபாதரச ஆவி நிரப்பப்பட்ட பல்புகளும் பின்னர் வந்தன.

தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட வகையில் பொருட்களைத் தயாரிக்க வெற்றிட நிலைமைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கொள்கலத்தின் உள்ளே இருக்கிற காற்றை விசேஷ பம்பு கொண்டு அகற்றி சீலிட்டுவெற்றிட நிலைமையை உண்டாக்குகிறார்கள். அப்படியான வெற்றிடம் கூட நூற்றுக்கு நூறு வெற்றிடமாக இருப்பது கிடையாது. கி.பி 1643-ம் ஆண்டில் எவாஞ்சலிஸ்டா டாரிசெல்லி என்ற இத்தாலிய விஞ்ஞானி இப்படி வெற்றிடம் அமைந்த பாரோமீட்டர் என்ற கருவியைத் தயாரித்தார்.

பூமியில் மேலும் மேலும் உயரே செல்லும்போது காற்றின் அடர்த்தி குறைகிறது. சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் கிட்டத்தட்ட காற்றே கிடையாது. ஆனாலும் அது முற்றிலும் வெற்றிடம் அல்ல. கிரகங்கள்நட்சத்திரங்கள் இடையிலான இடைவெளியானது அண்டவெளி எனப்படுகிறது. அண்டவெளி கூட முற்றிலும் வெற்றிடம் அல்ல.

ஏனெனில் அங்கு ஒரு கன மீட்டரில் சில ஹைட்ரஜன் அணுக்கள் (வாயு) இருக்கலாம். எந்த வித வாயுவும் இல்லாத இடம்தான் நூற்றுக்கு நூறு வெற்றிடம். எனவே இயற்கையில் முழுமையான வெற்றிடம் என்பது கிடையாது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert