தமிழகத்தில் வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு ரூ 2,079 கோடி நிவாரணம் வழங்குமாறு அமித்ஷாவிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் சென்னை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் டெல்லி  சென்றுள்ள திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான கோரிக்கை வைத்தார்.
இந்த சந்திப்பிற்கு பின்  நிருபர்களை சந்தித்த டி.ஆர்.பாலு கூறியதாவது:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் 2,500க்கும் மேற்பட்ட வீடுகள், 50 ஆயிரம் ஹெக்டார் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், 54 பேர் பலியாகியுள்ளனர்.
நவம்பர் 8 முதல் 14-ம் தேதி வரை இயல்பை விட அதிகமாக 49.6% மழை பெய்துள்ளது.
முதல்-அமைச்சரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் ஆய்விற்கு பிறகு முதற்கட்டமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 49,757 ஹெக்டர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
வெள்ள பாதிப்பை சீரமைக்க முதல்கட்டமாக மத்திய அரசிடமிருந்து ரூ. 550 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. நிரந்தர நிவாரணமாக ரூ. 2,079 கோடி கேட்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசுத் தரப்பிலிருந்து 6 பேர் கொண்ட குழுவானது வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்காக இன்று மாலை தமிழகத்திற்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசினார்.  தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert