பணக்கார நாடுகளின் வரிசையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா!
உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின் தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. McKinsey & Co வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகளாவிய செல்வம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த இரண்டு தசாப்தங்களில் உலக நிகர மதிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை சீனா பெற்றுள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டில் 156 டிரில்லியன் டொலரில் இருந்து 2020ம் ஆண்டில் உலகளாவிய நிகர மதிப்பு 514 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கை சீனா கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டில் 7 டிரில்லியன் டொலர்களாக இருந்த சீனாவின் பொருளாதார வளம், தற்போது 120 டிரில்லியன் டொலர்களாக அபார வளர்ச்சியடைந்துள்ளது.
மற்றொரு புறம், அமெரிக்காவின் பொருளாதார வளம் 90 டிரில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
இவ்விரு நாடுகளிலும் மூன்றில் இரண்டு பங்கு செல்வத்தை அந்நாட்டின் பெரும் பணக்காரர்களே வைத்துள்ளனர். ரியல் எஸ்டேட் துறை அதீத வளர்ச்சி அடைந்துள்ளது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.