ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புதமான யோகாசனம்

உடல் மனம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் ஒரு சிறந்த தீர்வாக யோகா இருப்பதால்தான் பயிற்சியாக இருந்தது ஆரோக்கியத்தை தரும் அற்புத கலையாக மாறியிருக்கிறது

இன்றைக்கு நலமாக சுகமாக சந்தோஷமாக வாழவேண்டும் என்ற நிலை மாறி எல்லோரிடத்திலும் ஒருவித பதற்றம், படபடப்பு, கோபம், எரிச்சல், டென்ஷன் இவைகளி னால் ஏற்படும் நோய்கள் அதற்கு மருத்துவம் என்று வாழ்க்கை எந்த ஒரு இலக்கும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

விழுங்கும் மாத்திரை முதலிடம் சாப்பிடும் உணவு இரண்டாம் இடம் என்ற நிலை ஆகிவிட்டது. மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை உடல் பருமன், தொப்பை, சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு மற்றும் பெண்களுக்கு வந்திருக்கக்கூடிய கர்ப்பப்பை சார்ந்த வியாதிகள், மூட்டுவலி, கழுத்துவலி மற்றும் மனம் சார்ந்த வியாதிகளான மன அழுத்தம், பதற்றம், மனச்சிதைவு என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா என்றால் நிச்சயமாக யோகாசனத்தில் மட்டும் தான் இருக்கிறது.

சரியான உணவுப் பழக்கம் மற்றும் முறையான யோகாசன பயிற்சிகளை விழிப்புணர்வுடன் தினமும் செய்து வந்தால் நிச்சயமாக மேற்கண்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் எப்போதும் ஆரோக்கியமாக வாழ யோகாசனத்தை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். உடல் மனம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் ஒரு சிறந்த தீர்வாக யோகா இருப்பதால்தான் பயிற்சியாக இருந்தது ஆரோக்கியத்தை தரும் அற்புத கலையாக மாறியிருக்கிறது.

யோகா என்றால் உடல், மனம், ஆன்மா இவைகளை ஒன்றிணைப்பது என்று பொருள். யோகாசனம், தியானம் இவைகளை தொடர்ந்து செய்யும்போது அதிகமான பிராண சக்தி உடம்புக்குள் சென்று ஒவ்வொரு உறுப்புகளையும் ஆரோக்கியமாக இயங்க வைத்து நோய் எதிர்ப்பு சக்தி கூடி நோய்கள் குணமாகிறது. யோகாசனத்தோடு சரியான உணவு முறைகளையும் பின்பற்றினால் மருந்து, மருத்துவர், மருத்துவமனை இந்த மூன்றும் தேவை இருக்காது.

எளிய முறை ஆசனங்களும் தீரும் நோய்களும்

தடாசனம்:

செய்முறை: விரிப்பின் மீது 1/2 அடி அளவு இடைவெளிவிட்டு கால்களை வைத்து நிற்கவும். இப்போது மெதுவாக குதிகால்களை உயர்த்தி நிமிர்ந்து உள்ளங்கைகளை மேல் நோக்கி திரும்பி ஒன்று சேர்த்து நமஸ்காரம் செய்வது போல் இருக்கவும். கால் விரல்கள் மட்டும் தரையில் நன்கு ஊன்றி அழுத்தம் கொடுத்து குதிகால்களை உயர்த்தி 10 எண்ணிக்கை வரை நிற்கவேண்டும். கை மற்றும் கால் வளைய கூடாது. பின்பு உடம்பை தளர்த்தி குதிகாலை சம தளத்தில் வைத்து இயல்பு நிலைக்கு வர வேண்டும். கையை மேலே உயர்த்தும் போது மூச்சை உள்ளிழுத்தும் கீழே இறக்கும் போது மெதுவாக வெளி விட வேண்டும்.

தீரும் நோய்கள்: இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நன்கு உயரமாக வளரலாம். கர்ப்பிணி பெண்கள் முதல் 6 மாதம் வரை இவ்வாசனத்தை செய்து பலன் பெறலாம். அதனால் சுகப்பிரசவம் உண்டாகும். குதிகால் வலியை போக்கும். ஞாபகசக்தி, மன ஒருமைப்பாட்டை வளர்க்கிறது. யோகாசனத்தை 8 வயது முதல் கடைசி காலம் வரை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

புஜங்காசனம்:

செய்முறை: விரிப்பில் குப்புறப் படுத்துக் கொண்டு கால்களை நன்றாக நீட்டி, கைகள் இரண்டையும் மார்புக்கு நேராக வைத்து விரல்களை விரித்து தரையில் நன்கு ஊன்றிக் கொள்ள வேண்டும். பின்பு மார்பை நிமிர்த்தி முதுகை பின்பக்கமாக வளைத்து அப்படியே தூக்க வேண்டும். முகம் நேராக பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். கால்களும் உடலின் இடுப்புக்குக் கீழுள்ள பாகமும் தரையைத் தொட்ட வண்ணம் இருக்க வேண்டும். கைகளை ஊன்றித் தலையை மேலே தூக்கும்போது மூச்சை உள்ளிழுத்து, மீண்டும் பழைய நிலைக்கு வரும்போது மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும். இது சர்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

தீரும் நோய்கள்: ஆஸ்துமா, காச நோய், சளி சம்பந்தப்பட்ட, தூசி மற்றும் ஒவ்வாமை வியாதிகள் குணமாகும். இடுப்பு பகுதி நன்கு பலம் பெறும். அதிகமான ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் செல்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

பச்சி மோத்சாசனம்:

செய்முறை: கால்கள் இரண்டையும் ஒரு சேர நேராக இணைத்து வைத்துக் கொள்ளவும். கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை வெளிவிட்டவாறு, மிக மெதுவாக கீழே குனிந்து கால்களை வளைக்காமல் கைகளால் கால் விரல்களை பிடித்து கொள்ளவும். முகம் கால் முட்டிகளில் புதைந்தவாறு இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்தவாறு 10 நொடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும். பின்னர் மூச்சை மெதுவாக வெளியேற்றி இயல்பு நிலைக்கு வர வேண்டும்.

தீரும் நோய்கள்: மன அழுத்தம் நீங்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி மறையும். மனம் அமைதியடையும். முதுகுத்தண்டுப் பகுதி நெகிழ்வடைந்து வயிறு உள் நோக்கி அழுத்தப்படுவதால் தொப்பை குறையும். இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த அனைத்து வியாதிகளும் குணமாகும். குறிப்பாக மாத விடாய் பிரச்சினை தீரும்.

திரிகோணாசனம்:

செய்முறை: இந்த ஆசனத்தில் நிற்கும் போது மூன்று முக்கோணம் இருப்பது போல் தெரிய வேண்டும். இரண்டு கால்களையும் நன்கு அகலமாக வைத்து ஊன்றி, கைகளை பக்கவாட்டில் நீட்டி, வைத்துக் கொண்டு பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டவாறே குனிந்து வலது கையால் இடது கால் பக்கமாக தரையில் ஊன்ற வேண்டும். இப்போது இடதுகை வானோக்கி உயர்ந்து இருக்க வேண்டும். இது தான் திரிகோணாசனம் நிலையாகும். இந்த நிலையில் பார்த்தால் உடம்பு மூன்று முக்கோண வடிவமாக தெரியும். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி இடது கையால் வலது கால் பக்கமாக தரையில் ஊன்ற வேண்டும். இப்போது, வலது கை வானோக்கி உயர்ந்து இருக்க வேண்டும்.

தீரும் நோய்கள்: முதுகெலும்பு, இடுப்புப் பகுதி நன்கு வலுப்பெறும். இடுப்பு பிடிப்பு, வயிற்று வலி போன்ற வியாதிகளை போக்கும். கால்களும், கைகளும் வலுவாக இருக்கும். இடுப்பு பகுதியில் இருக்கும் அதிகமான ஊளை சதை குறையும்.

தியானம்:

தியானம் செய்வதற்கு நேரம் தனிமை மற்றும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்த மூன்றும் தான் வேண்டும். சுகாசனத்தில் அல்லது மூட்டுவலி இருப்பவர்கள் ஒரு நாற்காலியில் நேராக நிமிர்ந்து அமர்ந்து கட்டை விரல் நுனியால் ஆட்காட்டி விரலைத் தொட்டு கொண்டு சின்முத்திரையில் அமர்ந்து கண்களை மூடி மூக்கின் வழியாக நடக்கும் மூச்சை மட்டும் கவனிக்க வேண்டும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் கவனிக்க மட்டுமே வேண்டும். இது தியானத்தின் தொடக்க நிலையாகும். இது போல தினமும் காலை, மாலை குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து செய்து வந்தால் மனம் அமைதியடையும். நேர்மறை எண்ணங்கள் மட்டும் தோன்றும். மனம் சார்ந்த அனைத்து வியாதிகளும் குணமாகும். அனைத்து நோய்களும் குணமாகி நினைத்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert