வருகிறது கொடிய வைரஸ் இந்திய விஞ்ஞானி எச்சரிக்கை
உலகில் வேகமாக பரவும் ‚ஒமைக்ரான்‘ வைரஸ் பாதிப்பு மிதமானதாக இருந்தாலும், அடுத்து வரப் போகும் வைரஸ் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்,“ என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ரவீந்திர குப்தா எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலையின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியராக பணியாற்றும் ரவீந்திர குப்தா, ஒமைக்ரான் வைரஸ் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனாவின் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும் பாதிப்பு மிதமாகவே உள்ளது. இதற்கு ஒமைக்ரான் ‚செல்‘ அணுக்களின் சேர்க்கை மற்றும் உருவாக்கத்தில் நிகழ்ந்த தவறுகள் தான் காரணம்.ஆனால், கொரோனாவில் இருந்து அடுத்து உருவாக உள்ள வைரஸ் மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தி பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் ‚டெல்டா‘ வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது. ஒமைக்ரான் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்பதால், ‚பூஸ்டர் டோஸ்‘ அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் அதனம் கெப்ரியேசஸ் கூறியதாவது:தடுப்பூசி போட்டவர்களில் டெல்டாவால் ஏற்படும் பாதிப்பை விட, ஒமைக்ரான் வைரசின் பாதிப்பு குறைவு தான். ஆனால், அதை மிதமானது என்ற பட்டியலில் சேர்க்க முடியாது.
உயிர் இழப்பு
இதர வைரஸ் போல ஒமைக்ரான் வைரசும் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களை மருத்துவமனைக்குக்கு அனுப்பி வருகிறது. பலர் உயிர் இழக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.