அமெரிக்கா டிரோன் தாக்குதல் அல்கொய்தா தலைவர் பலி
அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார். சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதற்காக அரசு படைகள் தீவிர நடவடிக்ைக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தெற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க புறக்காவல் முகாம் மீது கடந்த 2 நாட்களுக்கு முன் கிளர்ச்சியாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வீரர்கள் யாரும் காயமடையவில்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் அப்துல் ஹமீத் அல் மதார் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அல்கொய்தாவின் தலைவர் அப்துல் ஹமீத் அல் மதார் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இது, அமெரிக்க மக்கள், நட்பு நாடுகள் மற்றும் அப்பாவி மக்களை அச்சுறுத்தும் உலகளாவிய தாக்குதல் மற்றும் திட்டமிட்டு நடத்தும் அல்கொய்தாவின் திறனை சீர்குலைக்கும்,’ என கூறப்பட்டுள்ளது.