பிரித்தானியாவில் அதிகரிக்கவிருக்கும் ரொட்டியின் விலை: நிபுணர்கள் எச்சரிக்கை!
பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களில் ஒரு துண்டு ரொட்டியின் விலை 20 சதவிகிதம் வரை அதிகரிக்க இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமையின் விலை உச்சம் தொட்டுள்ளதையடுத்து, ரொட்டியின் விலை எக்கச்சக்கமாக உயரும் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ரொட்டி தயாரிக்கும் கோதுமைக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டில் கோதுமையின் விலை 26.7 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்ததுடன், போக்குவரத்துக்கான எரிபொருள் மற்றும் ரொட்டி சுடுவதற்கான அவன்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு போன்ற மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன..
இந்த விலை உயர்வுகளில் சிலவற்றை வியாபாரிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்றாலும், பல்பொருள் அங்காடிகளை வந்தடையும் பொருட்களின் விலை உயர்வைத் தவிர்க்க இயலாது என்கிறார்கள் நிபுணர்கள்.
இதுபோக, உலகம் முழுவதும் உணவுப்பொருட்களின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பாஸ்தாவின் விலையும் சமீபத்தைய சில வாரங்களில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
லொறி சாரதிகள் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் ஒரு நிலை உருவானதும், இந்த மிக மோசமான விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.