மக்கள் புரட்சி, திடீர் வன்முறை… விரையும் ரஷ்ய அமைதிப் படை- என்ன நடக்கிறது கஜகஸ்தானில்?!
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு அதிகம் கொண்ட நாடு என்னும் பெருமையைத் தன்வசம் வைத்திருக்கும் நாடு கஜகஸ்தான். இந்த புத்தாண்டைக் கொண்டாட்டங்களோடு மற்ற நாடுகள் தொடங்கியிருக்கும் போது, கஜகஸ்தான் மட்டும் போராட்டத்தோடு தொடங்கியிருக்கிறது.
என்ன தான் நடக்கிறது கஜகஸ்தானில்?!
இயற்கை வளங்கள் அதிகம் இருப்பினும் அதை மண்ணிலிருந்து பிரித்தெடுத்துச் சுத்திகரிக்கும் பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களே அதிகம் செய்கின்றன. செவ்ரான், எக்சோன் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்பதால், ஏற்றுமதியில் ஈடுபடுகின்றன. இதன் காரணமாக, உள்ளூர் மக்கள் பயன்பாட்டுக்குச் சிக்கல் இருந்துகொண்டே இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தான் அரசு சமையல் எரிவாயு மீதான அதன் விலை வரம்பை நீக்கியது. அதனால், எரிவாயுவின் விலை அதிகரித்தது. இந்த விலையேற்றத்தைக் கண்டித்து கஜகஸ்தான் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இந்த சீர்திருத்தத்தை அமல்படுத்திய அரசாங்கம் இது உள்நாட்டுச் சந்தைக்கான வரத்தை அதிகரிக்கும் என்றே எதிர்பார்த்தது. கஜகஸ்தானின் எண்ணெய் உற்பத்தி பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே செல்லும் நிலை இருக்கிறது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரே இரவில் விலை ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்து லிட்டருக்கு 120 டென்ஜ் ஆக உயர்ந்தது.
எரிபொருள் சந்தை சீர்திருத்தம் முதன்முதலில் 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாத தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்த சீர்திருத்தச் சட்டத்தின் காரணமாக அந்த நாட்டில் எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஏற்கெனவே கஜகஸ்தானில் 6.1 சதவிகித மக்கள் வேலைவாய்ப்பின்மையால் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த அதீத விலையேற்றம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
எரிசக்தித் துறையில் சமீபகாலமாகச் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் கஜகஸ்தான், கடந்தாண்டு போதிய அளவு மின் உற்பத்தி செய்யாமல் போனது. அதனால், தற்போது மின்தடையைச் சமாளிக்க கஜகஸ்தான் அரசு ரஷ்யாவின் உதவியை எதிர்நோக்கி இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விலையேற்றத்தைக் கண்டித்து அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையாக வெடிக்கத் தொடங்கியது. நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்தக் கண்ணீர் புகைக்குண்டுகள், தடியடி நடத்துவது என காவல்துறையினரும் கடுமைக் காட்டி வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் கஜகஸ்தான் அதிபர், „இந்த போராட்டம் தீவிரவாதிகளின் தூண்டுதலின் பேரில் நடந்துகொண்டிருக்கிறது“ என்று குற்றம்சாட்டியிருக்கிறார். கஜகஸ்தான் உள்துறை அமைச்சகம், „இந்த போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் 23 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர், சுமார் 748 பேர் காயமடைந்துள்ளனர்“ என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அரசியல் சூழல் :
சுமார் முப்பது ஆண்டுகளாக கஜகஸ்தானை ஆட்சி செய்துவந்த நூற்சுல்தான் நசார்பயேவ் கடந்த நவம்பரில் பதவி விலகினார். இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்த சில நாள்களில் இந்த பிரச்சனை வெடித்தது.ஆரம்பத்தில் எரிபொருள் விலை உயர்வு காரணமாகத் தொடங்கிய போராட்டங்கள் சில நாள்களில் அரசியலாக்கப்பட்டது. நூற்சுல்தான் நசார்பயேவின் முப்பது ஆண்டுக்கால ஆட்சியின் மீதான கோபத்தை மக்கள் வெளிக்காட்டத் தொடங்கினர். நாட்டில் பொருளாதார மாற்றம் வரும் என்ற அரசாங்கத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பல ஆண்டுகளாக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தன. வேலையின்மை மற்றும் போதிய ஊதியமின்மை பிரச்னைகள் இருந்து வந்த நிலையில், கொரோனா காரணமாகப் பொருளாதார மந்த நிலை உருவானது.
அரசு நடவடிக்கைகள் :
நாட்டின் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஜனாதிபதி டோகாயேவ் அவசரக்கால நிலையை பிரகடனப்படுத்தியிருக்கிறார். போராட்டங்களில் ஈடுபடும் மக்களைச் சமாளிக்க ராணுவப் படைகள் பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
ரஷ்யாவின் ரியாக்ஷன் :
கஜகஸ்தான் முன்பு சோவியத் ஒன்றிய நாடக இருந்தது. இன்றும் ரஷ்யா உடன் நல்ல உறவில்தான் இருக்கிறது. நசார்பயேவுக்கு பெரும் ஆதரவு அளித்தவர் ரஷ்யாவின் புடின். இந்த சூழலில் ரஷ்யா ராணுவத்தை அனுப்பி உள்ளது.