ஜெர்மனி காதலனை இந்து மத முறைப்படி திருமணம் செய்த ரஷிய பெண்
ஜெர்மனியை சேர்ந்த காதலனை ரஷிய பெண் இந்து மத முறைப்படி திருமணம் செய்தார்.
ரஷ்யாவை சேர்ந்தவர் ஜூலியா உக்வெஸ்கினா. இவர் வியட்நாம் நாட்டில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ் முல்லர். தொழிலதிபரான இவர் பன்னாட்டு நிறுவனத்தில் செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். கிறிஸ் தொழில் ரீதியிலான பயணத்திற்காக வியட்நாம் சென்றுள்ளார். அங்கு அவர் ஜூலியா உக்வெஸ்கினாவை சந்தித்துள்ளார். இருவரும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
காதலர்கள் இருவரும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்தந்த நாடுகளில் பின்பற்றப்படும் பண்பாடு, பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
ஜூலியா இந்தியாவுக்கு 8 முறை வந்துள்ளார். அதேபோல், கிறிஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், காதல் ஜோடிகளான கிறிஸ் – ஜூலியா இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இந்து மத முறைப்படி நமது திருமணம் நடைபெற வேண்டும் என ஜூலியா தனது விருப்பத்தை தெரிவித்தார். தனது காதலியின் விருப்பத்தை ஏற்ற கிறிஸ் இந்து முறைப்படியே திருமணம் செய்துகொள்வோம் என கூறினார்.
அதன்படி, இந்தியாவின் குஜராத் மாநிலம் சபர்காத் மாவட்டத்தில் உள்ள தனது நண்பர்களை தொடர்பு கொண்ட கிறிஸ் தனது திருமணம் இந்து மத முறைப்படி நடைபெற வேண்டும் கூறினார். இதனையடுத்து, கிறிஸ் – ஜூலியா திருமணத்தை சபர்காத் மாவட்டத்தில் நடத்த தேவையான நடவடிக்கைகளை நண்பர்கள் எடுத்தனர்.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை குஜராத்தின் சபர்காத் மாவட்டம் ஹிமத்நகர் கிராமத்தில் தனது காதலியான ரஷியாவை சேர்ந்த ஜூலியா உக்வெஸ்கினாவை ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ் முல்லர் இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமண புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.