சீனா:  ‚கடைசி உணவு‘ என குறிப்பிட்டு ஆர்டர் செய்தவரின் உயிரைக் காப்பாற்றிய டெலிவரி பணியாளர்

„என் வாழ்வில் கடைசி உணவு“ என்ற குறிப்புடன் ஆர்டர் செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற வாடிக்கையாளரின் உயிரை, உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் நடந்துள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் „என் வாழ்க்கையில் கடைசி உணவு“ என்ற குறிப்புடன் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து டெலிவரி செய்பவர் வாடிக்கையாளரின் இடத்திற்கு வந்தபோது, வாடிக்கையாளரின் வீட்டில் அழைப்பு மணிக்கு யாரும் பதிலளிக்கவில்லை, கதவையும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த டெலிவரி செய்யும் நபர், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

image

போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்தபோதும் அந்த வாடிக்கையாளர் கதவை திறக்க மறுத்துவிட்டார். மேலும், கதவை திறந்தால் ஜன்னலுக்கு வெளியே குதித்து விடுவதாகவும் மிரட்டினார். இதன்பின்னர் வாடிக்கையாளரை அமைதிப்படுத்திய தீயணைப்பு படையினர் அவரது அறைக்குள் சென்று அவரை காப்பாற்றினர்.

அந்த வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்ற உதவிய டெலிவரி செய்யும் நபரின் விரைவான சிந்தனைக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அவர் 60 தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது, அவருக்கு மருத்து சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்காக சமூக வலைதளங்களில் டெலிவரி செய்யும் நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM